பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் சார்பில் கனடா நாட்டின் இணையம் INC நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இக்கல்லூரியின் கணினி அறிவியல் துறையானது மாணாக்கர்களுக்காக பல்வேறு சிறப்பு வகுப்புகள், பயிலரங்கங்கள் மற்றும் மாணவர் சங்க நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு முக்கிய நிகழ்வாக இத்துறை கனடா நாட்டின் முன்னனி கணினி நிறுவனமான இணையம் INC எனும் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.அன்பரசி அவர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் திரு சந்தானம் சிவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ”மேகக் கணினியின் அத்தியாவசியம்” (CLOUD COMPUTING ESSENTIALS) எனும் தலைப்பில் பயிற்சிகள் மற்றும் தொடர்பான சான்றிதழ் படிப்புகளை இலவசமாக வழங்குகிறது. இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் வெ.சங்கீதா, உதவிப்பேராசிரியர் திரு த.அருண்நேரு மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.