பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரும் விழா (ஆண்டு விழா, விளையாட்டு விழா, மன்ற நிறைவு விழா) 12.04.2025, சனிக்கிழமை அன்று கல்லூரியின் திருவள்ளுவர் திறந்த வெளிக் கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமையுரை வழங்கி, கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். அவர் தம் சிறப்புரையில் ஏட்டுக்கல்வியோடு அனுபவக் கல்வியின் அவசியத்தை உண்மைச் சம்பவங்களை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார். மேலும், அரசு மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும், மாணவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து, கல்வியுடன் ஒழுக்கத்தையும் பேணுதல் வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்விற்கான வரவேற்புரையினை, சமூகவியல் துறைத்தலைவர் (பொ) முனைவர் பொ.செந்தில்குமார் நல்கினார். தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் டி.க.சித்திரை செல்வி தனது வாழ்த்துரையில், "மாணவர்களின் கல்லூரி காலம் என்பது எப்போதும் நினைவில் பசுமை மாறாமல் இருக்கும் பொற்காலம்" என்றார். உடற்கல்வி இயக்குனர் (பொ) த.அருண்நேரு, மாணவ, மாணவியரின் நிகழ்வாண்டு வெற்றிகளை விளையாட்டு அறிக்கையாக வாசித்தார். பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும், நுண்கலை மன்ற நிகழ்வுகள் மற்றும் கல்வியில் முதன்மை பெற்ற மாணவ, மாணவியர் என 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களின் பெயர் பட்டியலை துறைத்தலைவர்கள் முனைவர் வெ.சங்கீதா, முனைவர் ரா.புருஷ்சோத்தமன் இருவரும் வாசித்தனர். விளையாட்டு போட்டிகளில் வென்ற கெளரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நன்றியுரையினை கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் கோ. ஐய்யப்பன் வழங்கினார். அழகுத் தமிழில் நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை முனைவர் அ.சுபா தொகுத்து வழங்கினார்.