பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போட்டித் தேர்வுகளுக்கான மாணவர் பயிற்சி பட்டறை, கல்லூரி கருத்தரங்கு வளாகத்தில், இரு நாட்கள் (30.01.2025 & 31.01.2025) சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி நூலகம் மற்றும் வராண்டா ரேஸ் பயிற்சி மையம், சேலம் இணைந்து நடத்திய இந்நிகழ்வினை முதல்வர்(மு.கூ.பொ) முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார். அவர்தம் தலைமையுரையில், "தெளிவாக திட்டமிட்டு, சிரத்தையுடன், தொடர்ச்சியாக முயன்றால், மாணவர்கள் நிச்சயம் அரசு பணியில் பணியாற்றும் வாய்ப்பினை பெறலாம்" என்றார். தமிழ்த்துறை உதவி பேராசியர் முனைவர் பொ.செந்தில்குமார் பேசுகையில், "மாணவர்கள் நேர மேலாண்மையினை கடைப்பிடித்தல் வேண்டும் என்றார். மேலும், இணையத்தில் செலவிடும் நேரம் கல்வி சார்ந்தவையாக இருத்தல் வேண்டுமென அறிவுறுத்தினார். "அரசு போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி?" எனும் தலைப்பில், வராண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் முதன்மை பயிற்சியாளர் அ.சதீஷ்குமார் மற்றும் பயிற்றுனர் பி.ஸ்ரீஹரிபிரசாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். TNPSC, SSC, வங்கி, இரயில்வே, குடிமைப் பணிகள் ஆகிய தேர்வுகளின் பாடத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேற்கண்ட தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயாராவது, திட்டமிடுவது என வழிக்காட்டும் நெறிகளை எளிமையாக வகையில் விளக்கினர். நன்றியுரையினை தமிழ் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி சி.சீதா நல்கினார். வரவேற்புரையினையும், நிகழ்விற்கான ஏற்பாடுகளையும் கல்லூரி நூலகர் கி.ச.கல்யாணி செய்திருந்தார். அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.